சனி, 4 ஜூலை, 2020

நூலக அலுவலரின் பரிவு - p4 tamil composition



            "பொதுநூலகத்திற்குச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்குச் செல்வோமா?" என்று பாபு, சேகரிடம் கேட்டான். சேகர் "ஓ! போகலாமே" என்று கூறினான். பாபுவும் சேகரும் இணைபிரியா நண்பர்கள். எங்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள். அன்றும் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் இவ்வாறு பேசிக்கொண்டனர். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்ததால் வேகமாக நடந்து பொது நூலகத்தை அடைந்தனர்.

            வெயிலில் நடந்து வந்த அவர்களுக்கு, நூலகத்திலிருந்த குளிர்சாதனத்தின் குளிர்ச்சி இதமாக இருந்தது. நூலகத்தில், சிறுவர் பிரிவை நோக்கி நடந்தனர். புத்தக அலமாரியில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நண்பர்கள் இருவரும் எந்தப் புத்தகத்தை இரவல் வாங்கலாம் என்று பேசிக்கொண்டே ஒவ்வொரு புத்தகமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, மூன்றாவது அறையிலிருந்த ஒரு புத்தகம் பாபுவைக் கவர்ந்தது. அதை எட்டி எடுக்க பாபு முயற்சி செய்தான்.
  
      எட்டி எட்டிப் பார்த்தான், ஆனால் எடுக்க முடியவில்லை. அதனால் அலமாரியில் ஏறி அந்தப் புத்தகத்தை எடுக்க முயற்சித்தான். அதைப்பார்த்த சேகர், அதிர்ச்சியில் சிலை போல் நின்றான். அந்த நேரம் அங்கே வந்த நூலக அலுவலர் ஒருவர் ஓடிச் சென்று பாபுவை கீழே இறக்கிவிட்டார். அவர் பாபுவிடம், "மாணவனே! புத்தக அலமாரியில் ஏறக்கூடாது, புத்தகத்தை எடுக்க முடியவில்லையென்றால், உதவிக்கு நீ என்னை அழைக்கவேண்டும்" என்று பரிவுடன் அறிவுரை கூறினார்.

            பாபு அவரிடம், "என் தவறை மன்னித்துவிடுங்கள், இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன். உங்கள் பரிவுக்கு நன்றி" என்று கூறினான். அவர், பாபுவுக்கும் சேகருக்கும் மேலும் சில புத்தகங்களை புத்தக அலமாரியின் மூன்றாம் அறையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். இருவரும் அவருக்கு நன்றி கூறிவிட்டு, புத்தகம் இரவல் வாங்கும் நிலையத்திற்குச் சென்றனர். தங்களுடைய உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி, இரவல் வாங்கும் இயந்திரத்தின் வழியாக, தாங்கள் தேர்ந்தெடுத்த புத்தகங்களை இரவல் வாங்கிவிட்டு, தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

பொதுநூலகம் - Public library
குளிர்சாதனம் - Air conditioner
சிறுவர் பிரிவு - Children section
புத்தக அலமாரி - Bookshelf 
இரவல் - Borrow
கவர்ந்தது - Attracted
நூலக அலுவலர் - Library staff
பரிவு - Kind
இரவல் வாங்கும் நிலையம் - Borrowing station
உறுப்பினர் அட்டை - Membership card
இரவல் வாங்கும் இயந்திரம் - Borrowing machine


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக