அகிலனும் இனியனும் இணைபிரியா நண்பர்கள். இருவரும் சனிக்கிழமை காலை அகிலனின் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்றும் பின்னர் அருகிலிருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாடலாம் என்றும் திட்டம் போட்டிருந்தனர். அதன்படி சனிக்கிழமைக் காலை, அகிலன் காலை உணவை கட கட வென்று சாப்பிட்டு முடித்தான். தனக்கு மிகவும் பிடித்தமான சக்கரப் பலகையை தன்னுடன் எடுத்துக் கொண்டான். குறித்த நேரத்தில், மின்தூக்கி வழியாக தன் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தை அடைந்தான். அங்கே தன் நண்பன் இனியனைக் காணததால் அவன் வரும் வரை சக்கரப்பலகையில் விளையாடலாம் என்று நினைத்து விளையாட ஆரம்பித்தான்.
தன் நண்பன் வரும் திசையில் ஒரு கண் வைத்துக் கொண்டே சக்கரப்பலகையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஓர் பெரியவர் வந்தார். அவர், அகிலன் சக்கரப்பலகை வைத்து விளையாடுவதைப் பார்த்து, அவனிடம், “தம்பி, இங்கே சக்கரப்பலகை விளையாடக்கூடாது, ஏதேனும் விபத்து நிகழலாம்,” என்று கூறி சுவரில் ஒட்டியிருந்த எச்சரிக்கை பலகையைச் சுட்டிக் காட்டினார்.
அகிலன் சரி என்று அந்தப் பெரியவரிடம் கூறினானே தவிர விளையாடுவதை நிறுத்தவில்லை. பெரியவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார். “இனியன் தான் இப்போது வந்துவிடுவானே, அவன் வந்தவுடன் நான் இங்கிருந்து விளையாட்டு மைதானம் சென்றுவிடுவேன், அதற்குள் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது,” என்று அலட்சியமாக தனக்குள் சொல்லிக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் ஓர் மூதாட்டி, தன் இரு கைகளிலும் பைகளை சுமந்தபடி அங்கு வந்தார். மூதாட்டியை கவனிக்காத அகிலன், "சர்ர்" என்று அவர் மீது மோதினான். அவர் கையில் வைத்திருந்த பைகளும், அதிலிருந்த பொருள்களும் கீழே சிதறின. நல்லவேளையாக, அவருக்கு அடி ஏதும் படவில்லை. அகிலன், கீழே சிதறிய பொருள்கள் ஒவ்வொன்றாக பொறுக்கி, பையில் போட்டு, மூதாட்டியிடம் கொடுத்து, தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்டான். மூதாட்டி, “இனிமேல் இவ்வாறு செய்யாதே” என்று கூறி அவனை மன்னித்தார். “மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்” என்று கற்றுக் கொண்டான் அகிலன். இந்நிகழ்ச்சி அவன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது.
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:
1. திட்டம் - Plan
2. மின்தூக்கி - Elevator or Lift
3. சக்கரப்பலகை - Skate Board
4. விபத்து - Accident
5. எச்சரிக்கை பலகை - Warning Board
6. சுமந்து - Carry
7. சிதறின - Scattered
8. நல்லவேளையாக - Luckily
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக