நீச்சல் குளத்தில் கற்ற பாடம்
ரவியும் கவினும் இணைபிரியா நண்பர்கள். சனிக்கிழமை தோறும் நீச்சல் குளத்திற்குச் சென்று நீச்சல் பயிற்சி செய்வது அவர்களுடைய வழக்கம். அன்றும் வழக்கம் போலவே நீச்சல் குளத்திற்குச் சென்று நீச்சல் பயிற்சியை ஆரம்பித்தார்கள். ரவியும் கவினும் ஏற்கெனவே நீச்சல் பயிற்சி பெற்றிருந்ததால், மிதவை உதவியின்றி நன்றாக நீந்தினார்கள்.
சிறிது நேரம் நீச்சல் பயிற்சி செய்த கவினுக்கும் ரவிக்கும் அலுப்பு தட்டியது. அதனால், அவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த தண்ணீர் துப்பாக்கியை எடுத்து தண்ணீரை பீச்சி அடித்து விளையாட ஆரம்பித்தனர். ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீச்சி அடித்தவாறே நீச்சல் குளத்தைச் சுற்றி ஓடினர். அதனால், அவர்கள் ஓடி விளையாடிய இடமெல்லாம் தண்ணீர் தரையில் கொட்டிக் கிடந்தது.
கவினும் ரவியும் போட்டி போட்டு தண்ணீர் பீச்சி அடித்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர். தரையில் கொட்டியிருந்த தண்ணீரைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். கவினை துரத்தி ஓடிய கவின் தண்ணீரில் "சர்...ர்...ர்...ர்" ரென்று வழுக்கி "தொப்பென்று" விழுந்தான். அதைச் சற்றும் எதிர்பார்க்காத கவின், அதிர்ச்சியில் சிலை போல் நின்றான்.
வலியால் துடித்துக் கொண்டிருந்த ரவியைப் பார்த்த கவின், ஓடிச்சென்று தூக்கிவிட்டான். நல்லவேளையாக ரவிக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. ரவியை அழைத்துச் சென்று ஓர் இருக்கையில் அமர வைத்தான் கவின். ரவிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவனை அமைதிப்படுத்தினான். நீச்சல் குளத்தின் கரையில் தண்ணீரை பீச்சி அடித்து விளையாடுவது மிகவும் ஆபத்தானது என்பதை இருவரும் உணர்ந்தனர். பின்னர் இருவரும் உடை மாற்றிவிட்டு தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:
மிதவை - Float
தண்ணீர் துப்பாக்கி - Water gun
தண்ணீர் பீச்சி அடித்து - Splashing the water
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக