"ரீரீரீ....ங்" என்று பள்ளி இடைவேளை மணி ஒலித்தது. மாணவர் கூட்டம் பள்ளி உணவகத்தை "ஈ" போல் மொய்த்தது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த உணவை வாங்க, அந்தந்த கடைகளின் வரிசையில் நின்றனர். பாபு, கோழிச்சோறு கடையின் வரிசையில் நின்றுகொண்டிருந்தான். கோழிச்சோறு மற்றும் கோழி ரசம் அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவு. வரிசையில் நிற்கும் போதே கோழிச்சோற்றின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது.
பாபுவின் முறை வந்ததும் உணவை வாங்கிவிட்டு, அமர்வதற்காக ஓர் இருக்கையை நோக்கி நடந்தான். பாபு உணவு வாங்கிக் கொண்டு வருவதை, சாப்பிட்டுக் கொண்டிருந்த அகிலன் பார்த்தான். அகிலன், ஒரு குறும்புக்கார மாணவன். அவன் எப்போதும் துறு துறு என்று இருப்பதோடு ஏதாவது குறும்பைச் செய்துகொண்டிருப்பான். பாபுவிடம் ஏதாவது குறும்பு செய்து அவனை அழ வைக்கலாம் என்று நினைத்தான் அகிலன். அதனால், பாபு நடந்து வரும் வழியில் தனது காலை நீட்டி வைத்தான்.
கோழிச்சோற்றை ருசிக்கும் ஆசையில் நடந்து வந்துகொண்டிருந்த பாபு, அகிலனின் காலை கவனிக்காமல், தடுக்கி கீழே "தொப்பென்று" விழுந்தான். அவனுடைய கையிலிருந்த சோறு, ரசம் அனைத்தும் கீழே சிதறின. பாபு அதிர்ச்சியில் உறைந்தான். நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த சக மாணவர்களும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர். அப்போது தான் அகிலன் தன் தவற்றை உணர்ந்தான்.
சகமாணவர்கள் பாபுவைத் தூக்கி விட்டனர். அகிலன், பாபுவிடம் "நான் விளையாட்டாக செய்த செயல் வினையாக முடிந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடு" என்று கெஞ்சினான். பாபுவும் அவனை மன்னித்தான். அகிலன் தான் செய்த தவறுக்கு பரிகாரமாக பாபுவுக்கு உணவு வாங்கிக் கொடுத்தான். மேலும், கீழே சிதறிய உணவை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்தான். "விளையாட்டு வினையாகும்" என்று அகிலன் கற்றுக் கொண்டான். இனிமேல் இவ்வாறு குறும்பு செய்யக்கூடாது என்று முடிவெடுத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக