ஞாயிறு, 21 ஜூன், 2020

கவின் செய்த உதவி - P4 தமிழ் கட்டுரை



கவின் தினமும் பள்ளி முடிந்து, பெருவிரைவு ரயிலில் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அன்றும் பள்ளி முடிந்து, பொடி நடையாக அருகிலிருந்த பெருவிரைவு ரயில் நிலையத்தை அடைந்தான்.நகரும் மின்படிக்கட்டு வழியாக தளமேடையை அடைந்தான். களைப்பாக இருந்ததால், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து ரயிலின் வருகைக்காக காத்திருந்தான். சில நிமிடங்களில் ரயில், நிலையத்தை வந்தடைந்தது. ரயில் கதவுகள் திறந்தவுடன், முதல் ஆளாக ரயிலில் ஏறினான்.

ரயிலில் ஏறிய கவினின் கண்கள் அமர்வதற்கு ஓர் இருக்கையைத் தேடின. ரயிலில் கூட்டம் இல்லாததால், சில இருக்கைகள் காலியாக இருந்தன. அதில் ஓர் இருக்கையில் அமர்ந்தான். ரயிலின் கதவுகள் மூடின. ரயில் அடுத்த நிலையத்தை நோக்கி நகர்ந்து. கவினைத் தவிர அனைவர் கையிலும் கைத்தொலைப்பேசி இருந்தது. அனைவருடைய கவனமும் கைத்தொலைப்பேசியில் மட்டுமே இருந்தது. ரயில் அடுத்த நிலையத்தை அடைந்ததாக ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

ரயில் நிலையத்திலிருந்து, பெண்மணி ஒருவர் ரயிலில் ஏற முற்பட்டார். அவருடைய கவனம் முழுவதும் கையிலிருந்த கைத்தொலைப்பேசியிலேயே இருந்தது. அதனால் அவர் தளமேடை இடைவெளியை கருத்தில் கொள்ளாமல் ரயிலின் உள்ளே நுழைய முற்பட்டார். ஆனால் அவருடையக் கால் தளமேடை இடைவெளியில் சிக்கிக் கொண்டது. பதற்றமடைந்த அவர் காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அவர் மனம் பட பட வென்று அடித்தது. அதற்குள் ரயில் கதவுகள் மூடப்போவதாக ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்தது. அந்தப் பெண்மணியின் முகம் வெளிறிப் போனது.

நடந்ததை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த கவின், மின்னல் வேகத்தில் செயல்பட ஆரம்பித்தான். நொடிப்பொழுதில் அவசரகால அழைப்புப்பொத்தானை அழுத்தினான். ரயில் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக்  கூறினான். ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, ரயில்நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு ரயிலிலிருந்த பயணிகள் அவருக்கு உதவ ஒடிவந்தனர். அதற்குள், கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் முதலுதவிப் பெட்டியுடன் சிட்டாய்ப் பறந்து வந்தனர். அனைவரும் சேர்ந்து பெண்மணியைக் காப்பாற்றினர். பெண்மணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தக்கதருணத்தில் சிந்தித்துச் செயல்பட்ட கவினுக்கு அந்தப் பெண்மணி நன்றி நல்கினார். அங்கிருந்த அனைவரும் கவினை உச்சி குளிர பாராட்டினர். கவின் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

பெருவிரைவு ரயில் - MRT
பெருவிரைவு ரயில் நிலையம் - MRT Station
நகரும் மின்படிக்கட்டு - Escalator
இருக்கை - Seat
கைத்தொலைப்பேசி - Handphone
ஒலிப்பெருக்கி - Mike/Speaker
தளமேடை - Platform
தளமேடை இடைவெளி - Platform Gap
பதற்றம் - Tension
அவசரகால அழைப்புப்பொத்தான் - Emergency Button
தகவல் - Information
கட்டுப்பாட்டு நிலையம் - Control Station
கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் - Control Station Officers
முதலுதவிப் பெட்டி- First Aid Kit
அலறல் - Scream
பயணிகள் - Passengers / Commuters




1 கருத்து: