வெள்ளி, 5 ஜூன், 2020

மாட்டிக் கொண்ட கை -- தொடக்கநிலை 4 மாதிரி கட்டுரை (P4 Tamil Compo)


மாட்டிக் கொண்ட கை




கட்டுரை மாதிரி  எண் 1

அன்று திங்கள்கிழமை. பள்ளி முடிந்து வீடு திரும்பினேன். நான் பள்ளி இடைவேளையில் சாப்பிடாமல் இருந்ததால் பசி என்னை வாட்டியது.வீட்டை அடைந்ததும் உடையை மாற்றி விட்டு சமையலறைக்குச் சென்றேன். அங்கே, சாப்பாட்டு மேசையில் ஒரு ஜாடி இருந்தது. அந்த ஜாடியில் தின்பண்டங்கள் இருந்தன. அதைப் பார்த்ததும் நாவில் எச்சில் ஊறியது. கண்ணிமைக்கும் நேரத்தில், ஜாடியைத் திறந்தேன். கையை ஜாடியின் உள்ளே விட்டு ஒரு தின்பண்டத்தை எடுக்க முயற்சி செய்தேன்.

தின்பண்டத்தை கையில் பிடித்துக் கொண்டு, ஜாடியிலிருந்து கையை வெளியே எடுக்க முயன்ற போது, என் கை வெளியே வரவில்லை. நான் பல முறை கையை வெளியே எடுக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை. நான் அதிர்ச்சி அடைந்தேன். என் விழி பிதுங்கியது. என் சட்டை வியர்வையில் நனைந்தது.

என்ன செய்வது என தெரியாமல் தேம்பி தேம்பி” அழுதேன்.என் அழுகை சத்தம் கேட்டு என் அம்மா மின்னல் வேகத்தில் ஓடி வந்தார். அவர், “என்ன ஆயிற்று என்று கேட்டார். நான், “கை மாட்டிக் கொண்டது” என்று கூறினேன். அவர் ஏதோ ஒரு பொருளை எடுக்கச் சென்றார்.

அம்மா திரும்பி வந்த போது, அவர் கையில் திரவ சவர்க்காரம் இருந்தது. அவர் அதை என் கை மீது ஊற்றினார். பின் என் கையை இழுத்தார். கை வெளியே வந்தது.நான் அழுவதை நிறுத்தினேன்.அம்மாவுக்கு நன்றி கூறி, அவரைக் கட்டி அணைத்தேன். நாங்கள் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.


கட்டுரை மாதிரி எண் 2

“ரிங் ரிங்” என்று விழிப்பு கடிகை மணி அடித்தது. ராணி, தூக்கத்திலிருந்து கண் விழித்தாள். சுறு சுறுப்பாக காலைக் கடன்களை முடித்து, தன் அறையிலிருந்து வெளியே வந்தாள். அப்போது சமையலறையிலிருந்து “கம கம” என்று மணம் வீசியது. ராணி “கட கட” என்று சமையலறைக்குள் ஓடினாள். அங்கே அவள் அம்மா தோசை சுடுவதைக் கண்டாள். ஆனால், அவள் அம்மா குழம்பு இன்னும் சமைக்காததால், சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். பசி அவள் வயிற்றைக் கிள்ளியது. அதனால் மேசையிலிருந்த தின்பண்டத்தைச் சாப்பிட, கையை ஜாடிக்குள் போட்டாள்.

ராணி, ஓர் தின்பண்டத்தை எடுத்துவிட்டு, கையை ஜாடியிலிருந்து வெளியே எடுக்கப் பார்த்தாள். ஆனால், அவள் கையை வெளியே எடுக்க முடியவில்லை. திரும்ப திரும்ப முயற்சி செய்தாள். ஆனால் கை வெளியே வரவில்லை. அவள் பயப்பட ஆரம்பித்தாள்.

ராணியின் நெஞ்சு “பட பட” என்று அடித்தது. அவள் கையை வெளியே எடுக்க முடியாமல் தவித்தாள். பயத்தில் “ஓ” வென்று அழ ஆரம்பித்தாள். ராணி அழுவதைக் கேட்டு அவள் அம்மா ஒடி வந்தார். ராணியைப் பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என்று அவரால் யூகிக்க முடிந்தது.

அவர் சற்றும் தாமதிக்காமல், திரவ சவர்க்காரத்தை கொண்டு வந்து, ராணியின் கை மீது ஊற்றினார். பிறகு, ராணியின் கையை மெதுவாக வெளியே இழுத்தார். கை வெளியே வந்தது. மகிழ்ச்சியில், தன் அம்மாவைக் கட்டிப் பிடித்து ஓர் முத்தம் கொடுத்தாள். அம்மாவும் ஆனந்தம் அடைந்தார். மகிழ்ச்சியில், ஒன்றாக அமர்ந்து தோசை சாப்பிட்டனர்.


கட்டுரை மாதிரி எண் 3

“டிங் டிங் டிங்” என்று பள்ளி மணி ஒலித்தது. என் பள்ளி முடிந்தது. நான் பள்ளி நுழைவாயிலை நோக்கிச் சென்றபோது, நுழைவாயிலில் ஒரு பெரிய கூட்டமே திரண்டு விட்டது. நான் கூட்டத்தில் எறும்பு போல் நகர்ந்தேன். நான் வீட்டை அடைந்த போது பசியும் தாகமும் என்னை வாட்டியது. வீட்டில், என் அம்மா சமைத்துக் கொண்டிருந்த உணவின் மணம் என் மூக்கைத் துளைத்தது. நான் உடையை மாற்றி விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். சாப்பாட்டு மேசையில் ஒரு ஜாடி இருந்தது. ஜாடியில் தின்பண்டங்கள் இருந்தன. பசி தாங்காமல் நான் ஜாடியை திறந்து கையை உள்ளே விட்டேன்.

ஒரு தின்பண்டத்தை எடுத்துக் கொண்டு கையை வெளியே எடுக்க முயற்சி செய்தேன். ஆனால் என் கை வெளியே வரவில்லை. பல முறை கையை வெளியே எடுக்க முயற்சி செய்ததால் என் கை சிவந்தது.

தொடர்ந்து பல முறை முயற்சி செய்ததால் என் கை வலிக்க ஆரம்பித்தது. நான் வலி தாங்காமல் அழ ஆரம்பித்தேன். சத்தம் கேட்டு ஓடி வந்த என் அம்மா அதிர்ச்சி அடைந்தார். அவர், “அழாதே, திரவ சவர்க்காரம் கொண்டு கையை வெளியே எடுத்து விடலாம்” என்று கூறி திரவ சவர்க்காரம் எடுக்க சென்றார்.

அம்மா கூறியதைக் கேட்டு நான் அழுவதை நிறுத்தினேன். அம்மா வந்ததும் திரவ சவர்க்காரத்தை என் கையில் ஊற்றினார். பின்னர் கையை வெளியே எடுக்க முயற்சி செய்தார். இழுத்து, இழுத்து என் கை வெளியே வந்தது. மகிழ்ச்சியில் நான் அம்மாவை கட்டி அணைத்தேன். அன்றிலிருந்து நான் கவனமாக செயல்பட ஆரம்பித்தேன்.

   கட்டுரை மாதிரி எண் 4

    தேவி பள்ளி முடிந்து வீட்டை அடைந்தாள். பள்ளி சீருடையைக் களைந்து, வீட்டு உடைக்கு மாறினாள். தேவியின் அம்மா, சமையலறையில் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தார். சாப்பாட்டு மேசையிலிருந்த தின்பண்ட ஜாடியைப் பார்த்ததும், தேவிக்கு நாவில் எச்சில் ஊறியது. தின்பண்டம் சாப்பிடும் ஆசையில், அவசர அவசரமாக ஜாடியைத் திறந்து, கையை உள்ளே விட்டாள்.

    தின்பண்டம் கையில் கிடைத்தவுடன், கையை ஜாடியிலிருந்து வெளியே எடுக்க முயற்சித்தாள். ஆனால், அவளால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. திரும்ப திரும்ப முயற்சி செய்தும் பலனில்லாததால், அவளை பயம் தொற்றிக் கொண்டது. "ஓ" வென்று அழ ஆரம்பித்தாள்.

        தேவியின் அழுகுரல் கேட்டு அவள் அம்மா பதை பதைப்புடன் ஒடி வந்தார். தேவியின் கை மாட்டியிருப்பதையும், அவள் பயத்தில் அழுவதையும் பார்த்த அவர், "பயப்படாதே! கையை வெளியே எடுத்துவிடலாம்" என்று ஆறுதல் கூறினார். கையை எப்படி வெளியே எடுக்கலாம் என்று சிந்தித்த போது, அவருக்கு ஓர் யோசனை வந்தது.

        ஓடிச்சென்று, திரவ சவர்க்காரத்தை கொண்டு வந்து, அவள் கை மீது ஊற்றினார்.  பின்னர், தேவியின் கையை மெதுவாக வெளியே இழுத்தார். கை வெளியே வந்தது. தேவி, ஆனந்தத்தில் தன் அன்னையைக் கட்டி அணைத்தாள். "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ற பழமொழி அவளுக்கு ஞாபகம் வந்தது. அன்று முதல், எந்தச் செயலை செய்தாலும் யோசித்து செயல்பட வேண்டும் என்று தேவி கற்றுக் கொண்டாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக