பொழுது இனிதாகப் புலர்ந்தது. பாலன் தன் குடும்பத்தினரோடு, பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தான். அன்று விடுமுறையாதலால், கடற்கரைக்கு உல்லாசப்பயணம் செல்வதே அவர்களது திட்டம். பாலனும் அவன் தங்கை கவிதாவும் உல்லாசப்பயணத்திற்கு தேவையான பொருள்களை பைகளில் எடுத்து வைக்க அம்மாவுக்கு உதவினார்கள். பாலனின் அப்பா உந்துவண்டியை, உந்துவண்டிப் பேட்டையிலிருந்து எடுத்து வந்து, அவர்கள் வீட்டின் அருகில் நிறுத்தினார். உல்லாசப்பயணத்திற்கு தேவையான பைகளை உந்துவண்டியில் வைத்துவிட்டு, அனைவரும் உந்துவண்டியில் ஏறினார்கள். கவிதாவும் பாலனும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள்.
அரைமணி நேரத்தில் கடற்கரையை அடைந்தார்கள். கடலலை கரையைத் தொட்டு முத்தமிட்டது. அந்த ரம்மியமான காட்சியை ரசித்தவாறே அமர்வதற்கு இடத்தைத் தேடினார்கள். ஓர் நிழலான இடத்தில், உணவு வாட்டும் குழிக்கு அருகில் பாயை விரித்தனர். பாலனின் அம்மா, பைகளிலிருந்த உணவுப்பொருள்களையும், குளிர்பானங்களையும் பாயில் வைத்துவிட்டு, கொண்டுவந்திருந்த கோழித்துண்டுகளை உணவு வாட்டும் குழியில் வாட்ட ஆரம்பித்தார். கோழித்துண்டின் மணம் மூக்கைத் துளைத்தது. வாட்டிய கோழித்துண்டுகளையும், தின்பண்டங்களையும் உண்டு, குளிர்பானங்களை அருந்தி பசியைப் போக்கினர்.
உணவு உண்டு முடித்து, அனைத்து குப்பைகளையும் குப்பைத்தொட்டியில் போட்டு தங்கள் இடத்தை சுத்தப்படுத்தினர். பாலனுக்கும், கவிதாவுக்கும் மணலில் விளையாடுவது என்றால் கொள்ளைப் பிரியம். அதனால், அவர்கள் மணலில் விளையாடுவதற்கு வாளி,மணல்வாரி மற்றும் அச்சுகளைக் கொண்டுவந்திருந்தனர். அவற்றை வைத்து மணல்வீடு கட்ட ஆரம்பித்தார்கள். அம்மா கவிதனுக்கும், அப்பா கவிதாவுக்கும் உதவினர். இறுதியில் அழகான மணல்வீடுகளைக் கட்டி முடித்தனர்.
பாலன் தனக்கு துடுப்புப் படகு ஓட்டக் கற்றுத்தருமாறு, அப்பாவிடம் கோரிக்கை வைத்தான். அவரும் அதற்கு சம்மதித்து, துடுப்புப் படகை வாடகைக்கு எடுத்து அவனுக்கு பயிற்சி அளித்தார். கவிதாவும் அம்மாவும் கடற்கரையில் சிப்பிகள் சேகரித்தனர். பாலனும் அப்பாவும் துடுப்புப் படகு பயிற்சி முடிந்து களைப்புடன் வந்தனர். பொழுது சாயத் தொடங்கியது. தாங்கள் கொண்டுவந்திருந்தப் பொருள்களை பைகளில் எடுத்து வைத்து வீடு திரும்பினர். அன்றைய நாள் பாலன் மற்றும் கவிதாவின் மனதில் நீங்கா இடம்பெற்றது.
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:
கடற்கரை - Beach
பரபரப்பாக – Busy
தயாராகி – Getting Ready
உல்லாசப்பயணம் - Picnic
உந்துவண்டி – Car
உந்துவண்டிப் பேட்டை – Car Park
உணவு வாட்டும் குழி – Barbecue Pit
குளிர்பானம் – Cool-drink
கோழித்துண்டு - Chicken Piece
உண் (உண்டு)/ சாப்பிடு – Eat
அருந்தி/பருகி/குடித்து - Drink
வாளி – Bucket
மணல்வாரி -Spade
அச்சுகள் – Moulds
துடுப்புப் படகு – Canoe
வாடகை -Rent
பயிற்சி -Training
சிப்பிகள் - Shells
சேகரி (சேகரித்தனர்) - Collect
மணல்வீடு - Sand Castle
குப்பைத்தொட்டி - Dustbin
கோரிக்கை -Request
சம்மதி - Agree
களைப்பு - Tired
விடுமுறை - Holiday
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக