சனி, 24 அக்டோபர், 2020

சிறுவர் தினக்கொண்டாட்டம் - p3,p4 Tamil composition

             



     காலைச் சூரியன் கிழக்கு வானில் தன் செங்கதிர்களைப் பரப்பினான். இருள் மறைந்து மெல்ல மெல்ல ஒளி பரவ ஆரம்பித்தது. "கிரீச் கிரீச்" என்ற ஆரவாரத்துடன் பறவைகள் தங்கள் கடமைகளை ஆரம்பித்தன. பறவைகளின் ஒலி கேட்டு தூக்கம் கலைந்தார் சேரனின் அப்பா. தன் காலைக்கன்டகளை முடித்துவிட்டு நாள்காட்டியை பார்த்த அவர், அன்று சிறுவர்கள் தினம் என்பதைத் தெரிந்து கொண்டார். உடனே சேரனின் அறைக்கு விரைந்தார்.

            சேரன், போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அவர், சேரன் கண்விழிக்கும் போது இன்பஅதிர்ச்சி கொடுக்க எண்ணினார். பூனை போல் பதுங்கி, மெதுவாக அங்கிருந்து நகர்ந்தார். சேரனின் அம்மாவை எழுப்பி, சிறுவர் தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார். சேரனின் அம்மா மின்னல் வேகத்தில் செயல்பட ஆரம்பித்தார்.

             சேரனுக்கு மிகவும் பிடித்த கேக்கை செய்ய ஆரம்பித்தார். கேக் கலவையை தயார் செய்து மின்அடுப்பில் வைத்தார். கேக் தயாராவதற்குள் காலை உணவை தயாரித்தார். பின்னர் ஒரு அன்பளிப்புப் பையில், சில பரிசு பொருள்களும், மிட்டாய்களும் போட்டு வைத்தார். சேரனின் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சாப்பாட்டு மேசையை அலங்கரித்து, அதில் கேக்கை வைத்து, அதன் அருகில் அன்பளிப்பு பையையும் வைத்தனர்.

             சேரனின் அம்மா, சேரனை அழைத்து வர அவனுடைய அறைக்குச் சென்றார். சேரன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். சேரனின் அம்மா அவனை எழுப்பி சிறுவர்தின வாழ்த்துக் கூறினார். சேரன் இன்ப அதிர்ச்சி அடைந்தான். அவனை வீட்டுக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார், அம்மா. அங்கு அவன் கண்ட காட்சி அவனை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தியது. அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான். சேரன் தன் பெற்றோரைக் கட்டி அணைத்து முத்தமிட்டு நன்றி கூறினான். கேக் வெட்டி சிறுவர்தினத்தை ஆனந்தமாகக் கொண்டாடனான் சேரன். இந்த சிறுவர்தினக் கொண்டாட்டம் அவன் மனதில் நீங்கா இடம் பெற்றது. 


இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

நாள்காட்டி - Calender

சிறுவர் தினம் - Childrens day

போர்வை - Bedsheet

இன்பஅதிர்ச்சி - Surprise

மின்அடுப்பு - Oven

காலை உணவு - Breakfast

அன்பளிப்புப் பை - Goodie bag

வீட்டுக்கூடம் - Hall

ஏற்பாடுகள் - Arrangements

 

புதன், 30 செப்டம்பர், 2020

கால்வாய்க்கு ஒரு நடைபயணம் p3/p4 tamil compo/tamil composition

           




            "ஹை....யா இன்றைய நாள் நமக்கு மறக்கமுடியாத ஓர் இனிமையான நாளாக அமையப்போகிறது" என்று உற்சாகத்துடன் கூறினான், தேவன். "ஆமாம், ஆமாம், நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றான் மணி. அமுதனோ, "ஆமாம் இன்றைய தினத்தை நினைத்து, எனக்கு நேற்று இரவு தூக்கமே வரவில்லை, அவ்வளவு ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருந்தது" என்றான். நண்பர்கள் மூவரும் தங்கள் வீட்டின் அருகிலிருந்த கால்வாய்க்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கால்வாயில் மீன்பிடிக்க தூண்டில், பாய் மற்றும் உணவுக்கூடையும் தங்களுடன் எடுத்துக் கொண்டனர்.

            கால்வாயை சென்றடைந்ததும், அங்கிருந்த புல்தரையில் பாயை விரித்து, தாங்கள் கொண்டுவந்திருந்த பொருள்களை அதில் வைத்தார்கள். கால்வாயில் நீர் சல சல வென்று ஓடிக்கொண்டிருந்தது. கால்வாயில் ஓடிய நீரும், மெல்லிய தென்றல் காற்றும் வெயில் இல்லாத காலை நேரமும் அவர்கள் மனதை கொள்ளை கொண்டது. அந்த இயற்கையின் அழகை ரசித்தவாறே மூவரும் காலை உணவை உண்டனர். தேவனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். தான் கொண்டுவந்திருந்த தூண்டிலை எடுத்து கால்வாயில் மீன்பிடிக்க ஆரம்பித்தான். தேவனின் அதிர்ஷ்டம், சில நிமிடங்களிலேயே தூண்டிலில் மீன் மாட்டிக் கொண்டது. அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். மணியும், அமுதனும் தங்களது நண்பனின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டனர். 

       மணியும், அமுதனும் தாங்கள் கொண்டுவந்திருந்த காகிதங்களை வைத்து காகிதப்படகுகள் செய்தனர். கால்வாயில் அதிக நீரோட்டம் இல்லாததால், மணி தைரியமாக கால்வாயில் இறங்கி, தாங்கள் செய்த காகிதப்படகுகளை மிதக்க விட்டான். காகிதப் படகுகள் நீரில் அழகாக ஆடி அசைந்து சென்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவனும் சில காகிதப்படகுகளை செய்து மிதக்க விட்டான். காகிதப்படகுகள் அசைந்தாடிச் செல்வதைப் பார்த்து மூவரும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர்.

   அலுப்பு தட்டும் வரை காகிதப்படகுகளைச் செய்துவிட்டனர் மூவரும். நண்பகல் வேளை நெருங்கியது. மூவரும் தங்களுக்கு மிகவும் பிடித்த செயல்களைச் செய்து கொண்டிருந்ததால், நேரம் போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. பசி அவர்கள் வயிற்றைக் கிள்ளியது. அப்போது தான் அவர்கள் நண்பகல் வந்ததை உணர்ந்தனர். தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு மதிய உணவு சாப்பிட வீட்டிற்குச் சென்றனர். தேவன், மணி, அமுதன் மூவரும் நினைத்தவாறே அன்றைய நாள்அவர்களுக்கு இனிமையான, மறக்கமுடியாத நாளாக அமைந்தது. 

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

கால்வாய் - Canal

தூண்டில் - Fishing rod

காகிதப்படகுகள் - Paper boats

நீரோட்டம்  - Flow of water

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

நீச்சல் குளத்தில் கற்ற பாடம் - p4 tamil composition

 நீச்சல் குளத்தில் கற்ற பாடம்




ரவியும் கவினும் இணைபிரியா நண்பர்கள். சனிக்கிழமை தோறும் நீச்சல் குளத்திற்குச் சென்று நீச்சல் பயிற்சி செய்வது அவர்களுடைய வழக்கம். அன்றும் வழக்கம் போலவே நீச்சல் குளத்திற்குச் சென்று நீச்சல் பயிற்சியை ஆரம்பித்தார்கள். ரவியும் கவினும் ஏற்கெனவே நீச்சல் பயிற்சி பெற்றிருந்ததால், மிதவை உதவியின்றி நன்றாக நீந்தினார்கள்.

சிறிது நேரம் நீச்சல் பயிற்சி செய்த கவினுக்கும் ரவிக்கும் அலுப்பு தட்டியது. அதனால், அவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த தண்ணீர் துப்பாக்கியை எடுத்து தண்ணீரை பீச்சி அடித்து விளையாட ஆரம்பித்தனர். ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீச்சி அடித்தவாறே நீச்சல் குளத்தைச் சுற்றி ஓடினர். அதனால், அவர்கள் ஓடி விளையாடிய இடமெல்லாம் தண்ணீர் தரையில் கொட்டிக் கிடந்தது.

கவினும் ரவியும் போட்டி போட்டு தண்ணீர் பீச்சி அடித்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர். தரையில் கொட்டியிருந்த தண்ணீரைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். கவினை துரத்தி ஓடிய கவின் தண்ணீரில் "சர்...ர்...ர்...ர்" ரென்று வழுக்கி "தொப்பென்று" விழுந்தான். அதைச் சற்றும் எதிர்பார்க்காத கவின், அதிர்ச்சியில் சிலை போல் நின்றான்.

வலியால் துடித்துக் கொண்டிருந்த ரவியைப் பார்த்த கவின், ஓடிச்சென்று தூக்கிவிட்டான். நல்லவேளையாக ரவிக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. ரவியை அழைத்துச் சென்று ஓர் இருக்கையில் அமர வைத்தான் கவின். ரவிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவனை அமைதிப்படுத்தினான். நீச்சல் குளத்தின் கரையில் தண்ணீரை பீச்சி அடித்து விளையாடுவது மிகவும் ஆபத்தானது என்பதை இருவரும் உணர்ந்தனர். பின்னர் இருவரும் உடை மாற்றிவிட்டு தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.


இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

மிதவை - Float

தண்ணீர் துப்பாக்கி - Water gun

தண்ணீர் பீச்சி அடித்து - Splashing the water




வெள்ளி, 31 ஜூலை, 2020

விளையாட்டு வினையானது - p3,p4 tamil composition



"ரீரீரீ....ங்" என்று பள்ளி இடைவேளை மணி ஒலித்தது. மாணவர் கூட்டம் பள்ளி உணவகத்தை "ஈ" போல் மொய்த்தது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த உணவை வாங்க, அந்தந்த கடைகளின் வரிசையில் நின்றனர். பாபு, கோழிச்சோறு கடையின் வரிசையில் நின்றுகொண்டிருந்தான். கோழிச்சோறு மற்றும் கோழி ரசம் அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவு. வரிசையில் நிற்கும் போதே கோழிச்சோற்றின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது.

பாபுவின் முறை வந்ததும் உணவை வாங்கிவிட்டு, அமர்வதற்காக ஓர் இருக்கையை நோக்கி நடந்தான். பாபு உணவு வாங்கிக் கொண்டு வருவதை, சாப்பிட்டுக் கொண்டிருந்த அகிலன் பார்த்தான். அகிலன், ஒரு குறும்புக்கார மாணவன். அவன் எப்போதும் துறு துறு என்று இருப்பதோடு ஏதாவது குறும்பைச் செய்துகொண்டிருப்பான். பாபுவிடம் ஏதாவது குறும்பு செய்து அவனை அழ வைக்கலாம் என்று நினைத்தான் அகிலன். அதனால், பாபு நடந்து வரும் வழியில் தனது காலை நீட்டி வைத்தான்.

கோழிச்சோற்றை ருசிக்கும் ஆசையில் நடந்து வந்துகொண்டிருந்த பாபு, அகிலனின் காலை கவனிக்காமல், தடுக்கி கீழே "தொப்பென்று" விழுந்தான். அவனுடைய கையிலிருந்த சோறுரசம் அனைத்தும் கீழே சிதறின. பாபு அதிர்ச்சியில் உறைந்தான். நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த சக மாணவர்களும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர். அப்போது தான் அகிலன் தன் தவற்றை உணர்ந்தான்.

சகமாணவர்கள் பாபுவைத் தூக்கி விட்டனர். அகிலன், பாபுவிடம் "நான் விளையாட்டாக செய்த செயல் வினையாக முடிந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடு" என்று கெஞ்சினான். பாபுவும் அவனை மன்னித்தான். அகிலன் தான் செய்த தவறுக்கு பரிகாரமாக பாபுவுக்கு உணவு வாங்கிக் கொடுத்தான். மேலும், கீழே சிதறிய உணவை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்தான். "விளையாட்டு வினையாகும்" என்று அகிலன் கற்றுக் கொண்டான். இனிமேல் இவ்வாறு குறும்பு செய்யக்கூடாது என்று முடிவெடுத்தான்.


சனி, 25 ஜூலை, 2020

கேளிக்கைச் சந்தையில் ஓர் அனுபவம்

                




    மாலா மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பலவகையான இராட்டினங்களும், மின்விளக்குகளும் தெரிந்தன. மாலா தன் பெற்றோருடன் கேளிக்கைச் சந்தை நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தாள்.நுழைவாயிலுக்கு அருகிலிருந்த நுழைவுச்சீட்டு நிலையத்திலிருந்து மூன்று நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டனர். நுழைவுச்சீட்டுகளை நுழைவாயிலில் காண்பித்து விட்டு கேளிக்கைச் சந்தைக்குள் நுழைந்தனர். மாலாவின் மனம் குதூகலத்தில் துள்ளிக் குதித்தது.

                அன்று விடுமுறையாதலால் கேளிக்கைச் சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனால் எல்லா இராட்டினத்திற்கும் பாம்பு போன்ற நீண்ட வரிசையில் காத்திருந்த பின்பு தான் மாலாவால் இராட்டினத்தில் ஏற முடிந்தது. முதலில் உருள் வண்டி இராட்டினத்தில் ஏறினாள். பின்னர் குடை இராட்டினம், ரங்க இராட்டினம் இப்படி பல வகையான இராட்டினத்தில் ஏறி மகிழ்ந்தாள். எந்த இராட்டினத்தில் ஏறினாலும், கீழே நின்று தன்னை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் பெற்றோருக்கு, கையை அசைத்து தன் குதூகலத்தை வெளிப்படுத்தினாள்.

        மாலா, இராட்டினங்களில் ஏறி விளையாடி முடித்து களைப்புடன் வந்தாள். அதனால் அவள் பெற்றோர், அங்கேயிருந்த உணவுக் கடைத்தொகுதிக்கு, அவளை அழைத்துச் சென்றனர். அங்கே, பனிக்கூழ் கடை, சோளப்பொரிக் கடை, பஞ்சுமிட்டாய்க கடை, கோழிச்சோறு கடை மற்றும் பல உணவுக்கடைகள் இருந்தன. பனிக்கூழ் வேண்டும் என்று தன் பெற்றோரிடம் கூறி வாங்கிக்கொண்டாள். பனிக்கூழை சுவைத்துக் கொண்டே திரும்பியவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அவளுடைய நெருங்கியத் தோழி மீனா அருகிலிருந்த சோளப்பொரி கடையில் தன் தந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து எல்லையில்லா இன்பம் அடைந்த மாலா, அவளிடம் பேசுவதற்காக அருகில் சென்றாள். மாலாவின் பெற்றோர், அதை கவனிக்கவில்லை. மாலா தங்களுடன் வருவதாக நினைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

        மாலாவும் தங்கள் பெற்றோர் அங்கிருந்து சென்றதை உணரவில்லை. மாலாவும், மீனாவும் இராட்டினத்தில் ஏறிய அனுபவங்களைப் பற்றி நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், மாலா தன் தோழி மீனாவிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினாள். அங்கே அவளுடைய பெற்றோரைக் காணவில்லை. அதிர்ச்சியில் அவள் மனம் படபடத்தது. அருகிலிருந்த கடைகள் ஒவ்வொன்றாக தேடினாள். அவளுடைய கண்களிலிருந்து, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மாலா தங்களுடன் இல்லாததை உணர்ந்த அவள் பெற்றோர், அவளைத் தேடி உணவுக்கடைத் தொகுதிக்கு ஓடோடி வந்தனர். மாலா அழுது கொண்டே தங்களைத் தேடுவதைப் பார்த்த அவள் அம்மா, அவளை கட்டி அணைத்துக் கொண்டார். வேறு பல இடங்களில் தேடி விட்டு இறுதியில் அங்கே வந்த அவள் அப்பா, மாலாவும் அவள் அம்மாவும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

கேளிக்கைச் சந்தை - Funfair
நுழைவாயில் - Entrance
நுழைவுச்சீட்டு நிலையம் - Entrance ticket counter
நுழைவுச்சீட்டு - Entrance ticket
உருள் வண்டி இராட்டினம் - Roller coaster
குடை இராட்டினம்/ ரங்க இராட்டினம் - Merry go round
பனிக்கூழ் - Ice cream
சோளப்பொரி - Popcorn
பஞ்சுமிட்டாய் - Cotton candy
கோழிச்சோறு - Chicken rice

திங்கள், 20 ஜூலை, 2020

How to write tamil compo for p3/p4

தமிழ் கட்டுரை எழுதுவது எப்படி

சிறப்பான தமிழ் கட்டுரை எழுதுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இந்தப் பதிவானது தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்கு ஏற்ற ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

  • எழுதப்போகும் கதையானது கண்டிப்பாக இறந்தகாலத்தில் மட்டுமே எழுதவேண்டும்.
  • கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு படங்களுக்கும் நான்கு பத்திகள் எழுத வேண்டும்.
  • ஒரு படத்திற்கு நான்கு முதல் ஆறு வரை வாக்கியங்கள் இருக்க வேண்டும்.
  • இனிய சொற்றொடர் பயன்படுத்துவது கட்டுரைக்கு அழகு சேர்க்கும்.
  • செய்யுள் அல்லது பழமொழிகள் பயன்படுத்தலாம்.

ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு படங்களையும் நன்கு உற்றுநோக்கி, நாம் எழுதப்போகும் கட்டுரையின் முக்கிய கதாப்பாத்திரம் எது என்பதையும், கதையின் முடிவில் ஏதேனும் நீதி இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முக்கிய கதாப்பாத்திரம் எது என்பதை தெரிந்து கொண்டபின், அந்தக் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும்.

கட்டுரையை முதல்படத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். கட்டுரையை ஆரம்பிக்க பலவிதமான வழிகள் உள்ளன

  • உரையாடல் மூலம் ஆரம்பிக்கலாம். முக்கிய கதாப்பாத்திரம் மற்றொருவருடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற படம் இருந்தால் உரையாடல் மூலம் ஆரம்பிக்கலாம்.
  • முக்கிய கதாப்பாத்திரம் தனியாக இருந்தாலோ அல்லது பிறருடன் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ, கதை(கட்டுரை) நிகழும் நாள் அல்லது நேரத்தைச் சொல்லி ஆரம்பிக்கலாம்.

முதல் படத்தின் நிகழ்ச்சி, நிகழும் நாள்,காலம்(காலை,மாலை), நிகழ்ச்சியில் பங்குபெறும் கதாப்பாத்திரங்கள்(யார் யார் இருக்கிறார்கள்), நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகியவற்றைப் பற்றிக் கூற வேண்டும். பின்பு கதாப்பாத்திரத்தின் உணர்வு,மனநிலை(கவலை,மகிழ்ச்சி,அதிர்ச்சி,கோபம்) பற்றிக் கூற வேண்டும்.நிகழ்வு நடைபெறும் இடத்தில் கேட்கக்கூடிய ஓசைகளைப்(ஒலிகள்) பற்றியும் கூறலாம்.இவற்றைக் கூறினாலே ஒரு படத்திற்கு ஆறு வாக்கியங்கள் தாராளமாக வந்துவிடும்.

இரண்டாவது படத்தைப் பற்றி எழுதும் போது, இரண்டாவது பத்தி ஆரம்பித்து எழுதவேண்டும். இரண்டாம் படத்தின் கதையானது, முதல் படத்தின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். இரண்டாம் படத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடம், முதல் படத்திலிருந்து மாறியிருந்தால் அந்த இடத்தைப்பற்றியும், அங்கு யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும், அங்கு நடைபெறும் நிகழ்ச்சி பற்றியும் எழுத வேண்டும். முதல் படத்தைப் போலவே, கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் அங்கே கேட்கும் ஓசைகள்,ஒலிகள் பற்றி எழுதலாம்.

மூன்றாவது படத்பைப்பற்றி எழுதும் போது, மூன்றாவது பத்தி ஆரம்பித்து எழுதவேண்டும். மூன்றாவது படத்தின் கதையானது, இரண்டாம் படத்தின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். மூன்றாவது படத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடம், இரண்டாம் படத்திலிருந்து மாறியிருந்தால் அந்த இடத்தைப்பற்றியும், அங்கு யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும், அங்கு நடைபெறும் நிகழ்ச்சி பற்றியும் எழுத வேண்டும். கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் அங்கே கேட்கும் ஓசைகள்,ஒலிகள் பற்றி எழுதலாம்.

நான்காம் பத்தி மிக முக்கியமான பத்தி. கதைக்கு கட்டுரைக்கு முடிவுரை இந்தப் பத்தியில் எழுத வேண்டும். அதாவது கட்டுரையை முடிக்கும்படியாக எழுதவேண்டும். நான்காவது படத்பைப்பற்றி எழுதும் போது, நான்காவது பத்தி ஆரம்பித்து எழுதவேண்டும். நான்காவது படத்தின் கதையானது, மூன்றாவது படத்தின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். கட்டுரையில் ஏதாவது நீதி இருந்தால், அதை வைத்து கட்டுரையின் முடிவுரை எழுதவேண்டும். நீதி எழுதுவதற்கு, செய்யுள் அல்லது பழமொழிகள் மேற்கோள் காட்டி எழுதலாம். முக்கிய கதாப்பாத்திரம் ஏதாவது படிப்பினையைக் கற்றுக் கொண்டால், அதை வைத்து கதையை முடிக்கலாம். அந்த படிப்பினைக்குத் தகுந்தாற்போல் செய்யுள் அல்லது பழமொழிகள் மேற்கோள் காட்டி எழுதலாம். படிப்பினை அல்லது நீதி இல்லாத கட்டுரைகளுக்கு, முதல் மூன்று படங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள் நான்காம் படத்தில் முடிவுக்கு வரும்படியாக எழுதி கட்டுரையை முடிக்கவேண்டும்.


சனி, 4 ஜூலை, 2020

நூலக அலுவலரின் பரிவு - p4 tamil composition



            "பொதுநூலகத்திற்குச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்குச் செல்வோமா?" என்று பாபு, சேகரிடம் கேட்டான். சேகர் "ஓ! போகலாமே" என்று கூறினான். பாபுவும் சேகரும் இணைபிரியா நண்பர்கள். எங்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள். அன்றும் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் இவ்வாறு பேசிக்கொண்டனர். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்ததால் வேகமாக நடந்து பொது நூலகத்தை அடைந்தனர்.

            வெயிலில் நடந்து வந்த அவர்களுக்கு, நூலகத்திலிருந்த குளிர்சாதனத்தின் குளிர்ச்சி இதமாக இருந்தது. நூலகத்தில், சிறுவர் பிரிவை நோக்கி நடந்தனர். புத்தக அலமாரியில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நண்பர்கள் இருவரும் எந்தப் புத்தகத்தை இரவல் வாங்கலாம் என்று பேசிக்கொண்டே ஒவ்வொரு புத்தகமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, மூன்றாவது அறையிலிருந்த ஒரு புத்தகம் பாபுவைக் கவர்ந்தது. அதை எட்டி எடுக்க பாபு முயற்சி செய்தான்.
  
      எட்டி எட்டிப் பார்த்தான், ஆனால் எடுக்க முடியவில்லை. அதனால் அலமாரியில் ஏறி அந்தப் புத்தகத்தை எடுக்க முயற்சித்தான். அதைப்பார்த்த சேகர், அதிர்ச்சியில் சிலை போல் நின்றான். அந்த நேரம் அங்கே வந்த நூலக அலுவலர் ஒருவர் ஓடிச் சென்று பாபுவை கீழே இறக்கிவிட்டார். அவர் பாபுவிடம், "மாணவனே! புத்தக அலமாரியில் ஏறக்கூடாது, புத்தகத்தை எடுக்க முடியவில்லையென்றால், உதவிக்கு நீ என்னை அழைக்கவேண்டும்" என்று பரிவுடன் அறிவுரை கூறினார்.

            பாபு அவரிடம், "என் தவறை மன்னித்துவிடுங்கள், இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன். உங்கள் பரிவுக்கு நன்றி" என்று கூறினான். அவர், பாபுவுக்கும் சேகருக்கும் மேலும் சில புத்தகங்களை புத்தக அலமாரியின் மூன்றாம் அறையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். இருவரும் அவருக்கு நன்றி கூறிவிட்டு, புத்தகம் இரவல் வாங்கும் நிலையத்திற்குச் சென்றனர். தங்களுடைய உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி, இரவல் வாங்கும் இயந்திரத்தின் வழியாக, தாங்கள் தேர்ந்தெடுத்த புத்தகங்களை இரவல் வாங்கிவிட்டு, தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

பொதுநூலகம் - Public library
குளிர்சாதனம் - Air conditioner
சிறுவர் பிரிவு - Children section
புத்தக அலமாரி - Bookshelf 
இரவல் - Borrow
கவர்ந்தது - Attracted
நூலக அலுவலர் - Library staff
பரிவு - Kind
இரவல் வாங்கும் நிலையம் - Borrowing station
உறுப்பினர் அட்டை - Membership card
இரவல் வாங்கும் இயந்திரம் - Borrowing machine


திங்கள், 29 ஜூன், 2020

கடற்கரைக்கு உல்லாசப்பயணம் - P4 Tamil Composition





பொழுது இனிதாகப் புலர்ந்ததுபாலன் தன் குடும்பத்தினரோடுபரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தான்அன்று விடுமுறையாதலால்கடற்கரைக்கு உல்லாசப்பயணம் செல்வதே அவர்களது திட்டம்பாலனும் அவன் தங்கை கவிதாவும் உல்லாசப்பயணத்திற்கு தேவையான பொருள்களை பைகளில் எடுத்து வைக்க அம்மாவுக்கு உதவினார்கள்பாலனின் அப்பா உந்துவண்டியை, உந்துவண்டிப் பேட்டையிலிருந்து எடுத்து வந்துஅவர்கள் வீட்டின் அருகில் நிறுத்தினார்உல்லாசப்பயணத்திற்கு தேவையான பைகளை உந்துவண்டியில் வைத்துவிட்டுஅனைவரும் உந்துவண்டியில் ஏறினார்கள்கவிதாவும் பாலனும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள்.

அரைமணி நேரத்தில் கடற்கரையை அடைந்தார்கள்கடலலை கரையைத் தொட்டு முத்தமிட்டதுஅந்த ரம்மியமான காட்சியை ரசித்தவாறே அமர்வதற்கு இடத்தைத் தேடினார்கள்ஓர் நிழலான இடத்தில்உணவு வாட்டும் குழிக்கு அருகில் பாயை விரித்தனர்பாலனின் அம்மாபைகளிலிருந்த உணவுப்பொருள்களையும்குளிர்பானங்களையும் பாயில் வைத்துவிட்டுகொண்டுவந்திருந்த கோழித்துண்டுகளை உணவு வாட்டும் குழியில் வாட்ட ஆரம்பித்தார்கோழித்துண்டின் மணம் மூக்கைத் துளைத்தது. வாட்டிய கோழித்துண்டுகளையும்தின்பண்டங்களையும் உண்டுகுளிர்பானங்களை அருந்தி பசியைப் போக்கினர்.

உணவு உண்டு முடித்துஅனைத்து குப்பைகளையும் குப்பைத்தொட்டியில் போட்டு தங்கள் இடத்தை சுத்தப்படுத்தினர்பாலனுக்கும்கவிதாவுக்கும் மணலில் விளையாடுவது என்றால் கொள்ளைப் பிரியம். அதனால்அவர்கள் மணலில் விளையாடுவதற்கு வாளி,மணல்வாரி மற்றும் அச்சுகளைக் கொண்டுவந்திருந்தனர்அவற்றை வைத்து மணல்வீடு கட்ட ஆரம்பித்தார்கள்அம்மா கவிதனுக்கும்அப்பா கவிதாவுக்கும் உதவினர்இறுதியில் அழகான மணல்வீடுகளைக் கட்டி முடித்தனர்.

பாலன் தனக்கு துடுப்புப் படகு ஓட்டக் கற்றுத்தருமாறுஅப்பாவிடம் கோரிக்கை வைத்தான்அவரும் அதற்கு சம்மதித்துதுடுப்புப் படகை வாடகைக்கு எடுத்து அவனுக்கு பயிற்சி அளித்தார்கவிதாவும் அம்மாவும் கடற்கரையில் சிப்பிகள் சேகரித்தனர்பாலனும் அப்பாவும் துடுப்புப் படகு பயிற்சி முடிந்து களைப்புடன் வந்தனர்பொழுது சாயத் தொடங்கியது. தாங்கள் கொண்டுவந்திருந்தப் பொருள்களை பைகளில் எடுத்து வைத்து வீடு திரும்பினர்அன்றைய நாள் பாலன் மற்றும் கவிதாவின் மனதில் நீங்கா இடம்பெற்றது.


இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

கடற்கரை - Beach

பரபரப்பாக – Busy

தயாராகி – Getting Ready

உல்லாசப்பயணம் - Picnic

உந்துவண்டி – Car

உந்துவண்டிப் பேட்டை – Car Park

உணவு வாட்டும் குழி – Barbecue Pit

குளிர்பானம் – Cool-drink

கோழித்துண்டு - Chicken Piece

உண் (உண்டு)/ சாப்பிடு – Eat

அருந்தி/பருகி/குடித்து - Drink

வாளி – Bucket

மணல்வாரி -Spade

அச்சுகள் – Moulds

துடுப்புப் படகு – Canoe

வாடகை -Rent

பயிற்சி -Training

சிப்பிகள் - Shells

சேகரி (சேகரித்தனர்) - Collect

மணல்வீடு - Sand Castle

குப்பைத்தொட்டி - Dustbin

கோரிக்கை -Request

சம்மதி - Agree

களைப்பு - Tired

விடுமுறை - Holiday


ஞாயிறு, 21 ஜூன், 2020

கவின் செய்த உதவி - P4 தமிழ் கட்டுரை



கவின் தினமும் பள்ளி முடிந்து, பெருவிரைவு ரயிலில் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அன்றும் பள்ளி முடிந்து, பொடி நடையாக அருகிலிருந்த பெருவிரைவு ரயில் நிலையத்தை அடைந்தான்.நகரும் மின்படிக்கட்டு வழியாக தளமேடையை அடைந்தான். களைப்பாக இருந்ததால், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து ரயிலின் வருகைக்காக காத்திருந்தான். சில நிமிடங்களில் ரயில், நிலையத்தை வந்தடைந்தது. ரயில் கதவுகள் திறந்தவுடன், முதல் ஆளாக ரயிலில் ஏறினான்.

ரயிலில் ஏறிய கவினின் கண்கள் அமர்வதற்கு ஓர் இருக்கையைத் தேடின. ரயிலில் கூட்டம் இல்லாததால், சில இருக்கைகள் காலியாக இருந்தன. அதில் ஓர் இருக்கையில் அமர்ந்தான். ரயிலின் கதவுகள் மூடின. ரயில் அடுத்த நிலையத்தை நோக்கி நகர்ந்து. கவினைத் தவிர அனைவர் கையிலும் கைத்தொலைப்பேசி இருந்தது. அனைவருடைய கவனமும் கைத்தொலைப்பேசியில் மட்டுமே இருந்தது. ரயில் அடுத்த நிலையத்தை அடைந்ததாக ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

ரயில் நிலையத்திலிருந்து, பெண்மணி ஒருவர் ரயிலில் ஏற முற்பட்டார். அவருடைய கவனம் முழுவதும் கையிலிருந்த கைத்தொலைப்பேசியிலேயே இருந்தது. அதனால் அவர் தளமேடை இடைவெளியை கருத்தில் கொள்ளாமல் ரயிலின் உள்ளே நுழைய முற்பட்டார். ஆனால் அவருடையக் கால் தளமேடை இடைவெளியில் சிக்கிக் கொண்டது. பதற்றமடைந்த அவர் காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அவர் மனம் பட பட வென்று அடித்தது. அதற்குள் ரயில் கதவுகள் மூடப்போவதாக ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்தது. அந்தப் பெண்மணியின் முகம் வெளிறிப் போனது.

நடந்ததை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த கவின், மின்னல் வேகத்தில் செயல்பட ஆரம்பித்தான். நொடிப்பொழுதில் அவசரகால அழைப்புப்பொத்தானை அழுத்தினான். ரயில் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக்  கூறினான். ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, ரயில்நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு ரயிலிலிருந்த பயணிகள் அவருக்கு உதவ ஒடிவந்தனர். அதற்குள், கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் முதலுதவிப் பெட்டியுடன் சிட்டாய்ப் பறந்து வந்தனர். அனைவரும் சேர்ந்து பெண்மணியைக் காப்பாற்றினர். பெண்மணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தக்கதருணத்தில் சிந்தித்துச் செயல்பட்ட கவினுக்கு அந்தப் பெண்மணி நன்றி நல்கினார். அங்கிருந்த அனைவரும் கவினை உச்சி குளிர பாராட்டினர். கவின் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகள்:

பெருவிரைவு ரயில் - MRT
பெருவிரைவு ரயில் நிலையம் - MRT Station
நகரும் மின்படிக்கட்டு - Escalator
இருக்கை - Seat
கைத்தொலைப்பேசி - Handphone
ஒலிப்பெருக்கி - Mike/Speaker
தளமேடை - Platform
தளமேடை இடைவெளி - Platform Gap
பதற்றம் - Tension
அவசரகால அழைப்புப்பொத்தான் - Emergency Button
தகவல் - Information
கட்டுப்பாட்டு நிலையம் - Control Station
கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் - Control Station Officers
முதலுதவிப் பெட்டி- First Aid Kit
அலறல் - Scream
பயணிகள் - Passengers / Commuters