செவ்வாய், 30 நவம்பர், 2021

திரும்ப கிடைத்த பேனா - P6,P5 tamil composition


      

      முரளி மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தான். கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்ட வீட்டுக்கூடம், அவனது இன்பத்தை மேன்மேலும் அதிகரித்தது. அன்று முரளியின் பத்தாவது பிறந்தநாள். முரளியின் பெற்றோர், அவனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். முரளியின் நண்பர்களும், உறவினர்களும் அவனை வாழ்த்த பலவிதமான பரிசுப் பொருள்களுடன் காத்திருந்தனர். முரளி கேக் வெட்டியபிறகு ஒவ்வொருவராக வந்து வாழ்த்துக் கூறி பரிசுப்பொருள்களைக் கொடுத்தனர். இறுதியில் முரளியின் மாமா, விலையுயர்ந்த, தங்கநிறத்தில் மினுமினுத்த, பேனா ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்.

            அந்தப் பேனாவைப் பார்த்த உடன் முரளி ஆச்சர்யம் கலந்த சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். வெகுநாட்களாக தன் பெற்றோரிடம் அதைப் போன்ற ஒரு பேனாவை வாங்கித் தருமாறு மன்றாடிக்கொண்டிருந்தான், முரளி. அன்று அவன் கனவு நனவாகிப் போனதால் தலைகால் புரியவில்லை அவனுக்கு. தன் மாமாவைக் கட்டியணைத்து நன்றி கூறினான். அப்பொழுதிலிருந்து, அந்தப் பேனாவே உலகமாகிப் போனது அவனுக்கு. பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது. அடுத்தநாள் பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால், வீட்டுப்பாடங்களை செய்ய ஆரம்பித்தான். மாமா பரிசாகத் தந்த, தங்க நிறப்பேனாவை வைத்து, வீட்டுப்பாடங்களை மிக உற்சாகத்துடன் செய்து முடித்தான். அடுத்தநாள் எப்போது வரும் என்றும், தன் பள்ளி நண்பர்களிடம் எப்போது  தன் தங்கநிறப் பேனாவைக் காண்பிக்கலாம் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான், முரளி.

            நிலவு மறைந்து பகலவன் தூங்கி எழுந்தான். காலைக் கடன்களை முடித்து, சிற்றுண்டி உண்டு பள்ளிக்கு தயாரானான், முரளி. புதிய தங்கநிறப் பேனா தன் பள்ளிப்பையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, தன் பெற்றோரிடம் விடைபெற்றான். முரளியின் உள்ளத்தில் ஒரு வித உல்லாசம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாகப் பள்ளியை அடைந்தான். தன் பள்ளித் தோழர்களைக் கண்டதும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல்  அவன் முகம் மலர்ந்தது. தன் தோழர்களிடம் தங்கநறப் பேனாவைக் காட்டி, அதன் அருமை பெருமைகளை விளக்கினான். அதைக் கேட்ட அவன் தோழர்கள், வியப்பில் வாயடைத்து நின்றனர். முரளியின் கையிலிருந்த பேனா "தக தக" வென்று ஜொலித்ததைப் பார்த்து சிலர் பொறாமை கொண்டனர்.

                கணித பாட வகுப்பு ஆரம்பித்தது. தங்கநிறப் பேனாவையே பயன்படுத்தி பாடங்களை எழுதினான், முரளி. பள்ளி இடைவேளை வந்ததும், தங்கநிறப் பேனாவை கண்ணும் கருத்துமாக தன் பேனாப்பையில் வைத்து விட்டு வகுப்பை விட்டு வெளியேறினான். பள்ளி உணவகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. "மீ கொரிங்" கடையில் பாம்பு போன்ற நீண்ட வரிசை இருந்தபோதும், அவனுக்கு மிகவும் பிடித்த உணவு "மீ கொரிங்"  என்பதால், அதன் வரிசையில் பொறுமையாக காத்திருந்தான். தன் முறை வந்ததும் உணவை வாங்கி வந்து, மேசையில் அமர்ந்து நன்கு ரசித்து, ருசித்து சாப்பிட்டான்.

             உணவு சாப்பிட்டு முடித்து தன் வகுப்புக்கு திரும்பிய முரளிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவன் மேசையிலிருந்த பேனாப் பை திறந்து, பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது. அதைப் பார்த்த முரளிக்கு, இதயத் துடிப்பே ஒரு கணம் நின்று விட்டது போன்று இருந்தது. மறுகணம், அவன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. தனது தங்கநிறப் பேனாவை யாரோ திருடிவிட்டார்கள் என்பதை உணர்ந்தவனுக்கு, மனது வலித்தது. தன் வகுப்புத் தோழர்களிடம், "தயவு செய்து என் பேனாவை என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள்", என்று கெஞ்சினான். யாரும் பேனாவை எடுத்ததாக ஒப்புக்கொள்ளவில்லை.

            அந்நேரம், தமிழ் பாடவேளை என்பதால், தமிழாசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்த முரளியிடம், "என்ன நிகழ்ந்தது", என்று கேட்டார் ஆசிரியர். துக்கம் தொண்டையை அடைத்தவாறே நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான், முரளி. அதைப் பொறுமையாக கேட்டறிந்த ஆசிரியர், வகுப்பு மாணவர்களிடம், "திருடுவது ஒரு தீய ஒழுக்கம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பைத் தரும்.

என்ற திருக்குறளுக்கு ஏற்ப, தீய ஒழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும். எனவே திருடுவதை இப்போதே விட்டுவிடுங்கள். பேனாவை எடுத்தவர் வகுப்பு முடிந்த பிறகு ரகசியமாக என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று அறிவுரை கூறினார். அறிவுரையைக் கேட்ட முரளியின் தோழன் அருண், உடனே எழுந்து, "பேனாவை நான் தான் ஓர் ஆசையில் எடுத்துவிட்டேன். இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சினான். ஆசிரியரும் முரளியும் அவனை மன்னித்தனர். தன் பேனா திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் நிம்மதி பெருமூச்சு விட்டான் முரளி.



ஞாயிறு, 23 மே, 2021

நீ செய்த ஓர் அறச்செயல் - P5/P6 Higher Tamil Composition (உயர்தமிழ் கட்டுரை)

வினா:

நீ செய்த ஓர் அறச்செயல்/நல்லசெயல் பற்றி ஒரு கட்டுரை எழுது.

கட்டுரை

                கதிரவன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். துணைப்பாட வகுப்பு முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன், நான். இரு சாலைகளைக் கடந்து, நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்த போது, தரையில் ஒரு பணப்பை கிடப்பதைப் பார்த்தேன். அதை கையில் எடுத்து பார்த்த போது, அதில் நிறைய பணமும், கடன் அட்டைகளும், அடையாள அட்டையும் இருந்தது. அதைப் பார்த்தவுடன், என் கண்கள் அகல விரிந்தன

                சுற்றும் முற்றும் பார்த்தேன். நடைபாதையில் ஒருவரையும் காணவில்லை. பணப்பையை நாமே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஒரு கணம் என் மனதில் தோன்றி மறைந்தது. ஆனால் அன்றைய தினம் ஆசிரியர் வகுப்பில் கற்றுக் கொடுத்த,

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்"

என்ற திருக்குறள் நினைவுக்கு வந்தது. பொறாமை, பேராசை,கோபம்,கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடாமல் வாழ்வதே அறமாகும். எனவே பேராசை என்ற குற்றத்திற்கு ஆளாகமாட்டேன் என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். பணப்பையை நாமே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மறைந்து, அதை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. 

                பணப்பையை எப்படி உரியவரிடம் சேர்ப்பது என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினேன். அப்போது ஓர் எண்ணம் மின்னலெனப் பளிச்சிட்டது. அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடுவதே அந்த எண்ணம். காவல் நிலையத்தை நோக்கி நடந்தன என் கால்கள்.

                சற்று நேரத்தில் காவல் நிலையத்தைச் சென்றடைந்தேன். அங்கிருந்த காவல் அதிகாரியிடம் விவரத்தைச் சொல்லி பணப்பையை ஒப்படைத்தேன். காவல் அதிகாரி எனது நேர்மையைப் பாராட்டி புகழ்மாலைச் சூட்டினார். பின்னர் பணப்பையிலிருந்த அடையாள அட்டையை எடுத்து, அதன் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய முற்பட்டார். 

                அப்போது காவல்நிலையத்திற்கு ஒரு முதியவர் அரக்க பரக்க ஓடி வந்தார்.  அந்த முதியவருடைய கண்களில் நீர் திரண்டிருந்தது. வார்த்தைகள் தொண்டைக்குழியில் மாட்டுக் கொண்டு வெளிவரத் தவித்தன. அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. காவல் அதிகாரி அவரிடம், "ஐயா, ஏன் இப்படி பதற்றத்துடன் காணப்படுகிறீர்கள்? என்ன நடந்தது என்று விளக்கி கூறுங்கள்" என்றார். அதைக் கேட்டு அந்த முதியவர் சற்று நிதானத்திற்கு வந்தார். அவர் காவல் அதிகாரியிடம், "ஐயா நான் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு செல்லும் வழியில் என் பணப்பையைத் தொலைத்துவிட்டேன். என் பணப்பையில் ஆயிரம் வெள்ளி பணம், கடன் அட்டைகள் மற்றும் என்னுடைய அடையாள அட்டையும் இருந்தது. அதை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள்" எனறு கண்ணீர் மல்க கூறினார்.

                அதைக் கேட்ட காவல் அதிகாரி, அவருடைய அடையாள அட்டை எண்ணைக் கூறும்படி கேட்டார். முதியவர் கூறிய அடையாள அட்டை எண்ணும், நான் கண்டுபிடித்து கொடுத்த பணப்பையிலிருந்த  அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருந்ததை காவல் அதிகாரி கண்டறிந்தார். அவர் முதியவரிடம், "கவலைப்படாதீர்கள், உங்களுடைய பணப்பை இங்கு தான் இருக்கிறது. இந்த சிறுவன் தான் கண்டுபிடித்து கொடுத்தான்" என்று என்னை கை காட்டினார். அச்செய்தி அவருக்கு தேன் போல இனித்தது. அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவர் என்னிடம், "தம்பி, அறம் செய விரும்பு என்ற ஆத்திச்சூடிக்கேற்ப நீ அறச்செயல் செய்துள்ளாய், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று என்னை வாழ்த்தினார். அதைக் கேட்ட எனக்கு உச்சி குளிர்ந்தது. ஏதோ ஒன்றை சாதித்தது போல் ஓர் உணர்வு தோன்றியது. இனி என்றும் அற வழியில் தான் நடக்க வேண்டும் என்ற முடிவுடன் என் வீட்டை நோக்கி நடந்தேன் நான்.


பணப்பை - Wallet

கடன் அட்டை - Credit card

அடையாள அட்டை - Identity card

உரிமையாளர் - Owner